Tuesday, January 22, 2013

புத்தரிசி - கவிஞர் சித. அருணாசலம் (பொங்கல் கவியரங்க கவிதை)

1
புத்தரிசி
இலக்கிய வேந்தர் - எங்களை
இயக்கிடும் ஏந்தல்
எடுத்தவை திறம்பட
முடித்திடும் ஆற்றல்.
தமிழ் எழுத்தாளர் கழகத்
தலைமைக்கு வணக்கம்.
கவிதையா* கட்டுரையா* தொகுப்பாய்வா* - அவை
அனைத்தும் தங்குமிடம்,
அருவியாய்ப்; பொங்குமிடம்
எங்கள் ரத்தினம்.
என்றும் தமிழுக்கு சுபதினம்.
சிரித்த முகமாய்
சிந்தனை வயமாய்
நிந்தனை அறியா மனமாய்
நிலை பெற்ற பண்பிற்குப்
பணிவான வணக்கம்.
சபைக்கு மட்டுமின்றி
சக கவிஞர்களுக்கும் வணக்கம்.
அரிசி போட இடமில்லா அரங்கிலே
அரிசி பற்றிப் பேச வந்திருக்கிறேன்.
2
விதை நெல் வீரியம் கொண்டு
விண்ணைத் தொட்டுவிடலாமென
இருமாந்து வளரும்.
தலைக் கனமும்,
தானியக் கனமும் பெரிதாக,
தொங்கிய தலையாய்
குனிந்த நிலையாய்
மண்ணில் தலை பதிய
மாசு நீங்கிப் பாடம் கற்கும்.
கற்றதனால் ஆன பலனதனால்
பக்குவப்பட்ட மனம்
பசியைப் போக்கப்
பரிசாகத் தந்தது தான்
இந்தப் புத்தரிசி.
உடலை வளைத்து
உழைக்கின்ற வர்க்கத்துக்கு
இது சத்தரிசி.
அரிசி..
தமிழனின் வாழ்வில்
கலாச்சாரத்தின் அடையாளம்.
கடின உழைப்பிற்குப் பரிகாரம்.
தானியங்களின் வரிசையில்
தகுதியான முதலிடம்.
உழுதுண்டு பயிர் செய்து
உய்வு பெற்றதெல்லாம்
அரிசியை வைத்துத் தான்.
3
நெல்லே கூலியாக
நீண்ட நாட்கள் வரை
நிறைவாகப் பெறப்பட்டது.
குவித்து வைத்து அரிசியைக்
கோபுரமாக்கிப் பார்ப்பதை
மங்களம் நிறைந்ததாய்
மக்கள் நினைத்தார்கள்.
அரிசி..
அகர வரிசையை
அறிவிற்குள் ஏற்றி வைக்கப்
பரப்பி வைக்கப்பட்டுப்
பலகையாகிறது.
பிஞ்சு விரல்கள்
கோலம் போட
எழுத்தறிவைப் புத்தியில்
ஏற்றி வைக்கிறது.
வயிற்றுக்கு உணவாவதுடன்
வாழ்க்கைப் பாடத்திற்கும்
வழியாகிறது அரிசி.
அரிசியில் கைவைத்துத் தான்,
அடுத்த பாடம் தொடரும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
தலையே பிரதானம் ஆனாலும்
வயிறு நிறைந்தால் தான்
வழக்கத்தில் அனைத்தும் சீராகும் - அந்த
4
அடிப்படை தேவையைப்
படிப்படியாய்ப் பூர்த்தி செய்வது அரிசி.
பக்குவப் படுத்துவதும் அரிசி.
சோற்றைச் சேர்த்தால்
சத்தெல்லாம் கொழுப்பாகும்,
சுத்தமாய் நலம் கெடும்,
என்பது மருத்துவம்
அதற்காக ஒட்டுமொத்தமாய்
அரிசியைத் தள்ள முடியுமா?
அது இல்லாத உணவைத் தான்
உள்ளே தள்ள முடியுமா?
அரிசி சேராத உடம்பு
அலுப்பைச் சேர்த்துக் கொள்ளும்.
அரிசியுடன் உழைப்பு
ஆறு கட்;டு உடம்பைத்; தரும்.
உழவனின் வேர்வையும்
உப்புக் கரிக்கும் - அந்த
உன்னதத் தீர்த்தத்தால் தான்
உலகமே இயங்கும்.
உலகை இயக்குபவன்
உடலிலே சட்டையில்லை.
ஊருக்குள் உலை பொங்க வைப்பவன்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியதில்லை
ஆகாயம் அழுகாமல் போனதால்
அடிக்கடி அழுகின்ற நிலை உழவனுக்கு.
5
கை விரித்த காவிரியும்,
கண் திறக்கா ஆகாயமும்
உழவனின் நிலையை
உருப்பட விடவில்லை.
தண்ணீர் மட்டுமல்ல,
தாங்கி வரும் மணலும்
தட்டுப்படாமல் போனதால்
விதைக்கப்படும்
விளைச்சல் நிலங்களிலெல்லாம்
வீடுகள் முளைத்துக் கட்டடக்
காடுகளாகி விட்டன.
நதிக்கரைகளில் வளர்ந்தது
நாகரீகமெனப் படித்திருக்கிறேhம்.
நதிகளைத் தொலைத்துவிட்டு
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறேhம்?
நிலைமை இப்படியே
நீடித்துக் கொண்டிருந்தால்,
விவசாயம் என்பதை
விளக்கப் படத்துடன் -நம்
பரம்பரையினர்
பாடப் புத்தகத்தைப்
பார்த்துத் தான் தெரிந்து
கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் தொகை ஒருபுறம்
மலையளவு உயர்ந்திருக்க
விளைச்சல் நிலங்களோ
6
எதிர்மறையாய்க் குறைகிறது.
புத்தரிசியைப் பொங்கலன்று
பார்க்கின்ற பரவசம்
மொத்தமாய்க் காணாமல்
முழுவதும் தொலைந்து விடுமோ – என்ற
அச்சம் தான் அதிகமாகிறது.
அப்புறம் அரிசி என்பதே
அரிதாகப் போய்விடும்.
அறுவடை முடிந்து,
அரிசியைப் பிரித்து,
இனியதாசனின் புதுப்பானைக்கு
இதோ புத்தரிசி.
மாதங்கியிடம்
மஞ்சளை வாங்கி
வளர்ந்து செழித்த
வைரவன் தரும் கரும்புடன்
இனிப்பான பொங்கலை
இளங்கோவனும்,
சத்தான வெண்பொங்கலை
சக்திக் கண்ணனும்,
விருந்தாய்ப் படைக்க
மனித நேயத்தின் அடையாளம்
மாட்டுப் பொங்கலுடன்
மகிழ்வுடன் கோவிந்தராசு முடிக்கட்டும்.
விருந்து பொங்கலில் மட்டுமல்ல.
7
விளைத்திடும் தமிழிலும் தான்.
-சித. அருணாசலம்.