Saturday, November 14, 2009

நாளை கவிச்சோலையில் பூக்கள் புயலாகின்றன!

அனைவரையும் அன்போடு அழைக்கிறது சிங்கப்பூர்த்தமிழ் எழுத்தாளர் கழகம்!

Thursday, November 12, 2009

வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது

சமீபத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கண்ணதாசன் விழாவில் (2009) கவிதாஞ்சலி படைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்த கவிஞர் திரு.மா.கண்ணப்பன் அவர்கள் உன் பேர் என்ன?’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.


இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "புயலான பூ"


சிங்கப்பூர்க் கவிஞர் திரு. முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும் நடைபெறும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது


இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751।



நிகழ்வில் தங்கமுனை விருது பெற்றவர்களுக்குப் பாராட்டும் இடம்பெறும்.



அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
அன்புடன்

Thursday, October 29, 2009

ஆசிரியரும் மாணவரும் கலக்கிய கண்ணதாசன் விழா - 09)

அனைத்து அங்கங்களும் கைதட்டல் பெற்றன. ஐநூறு பேருக்குக் குறையாத கூட்டம், ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாய்க் கவனித்துக் கைதட்டி இரசித்து மகிழ்ந்தது.

வசந்தி ராமச்சந்திரனின் இனிமையான தமிழ்வாழ்த்தோடு கூட்டம் ஆரம்பம் ஆகியது. கண்ணதாசன் பாடலுக்கு ஆடிய மெத்தடிஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியரின் நடனம் மனம் கவர்ந்தது.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ….பாட்டெல்லாம் கண்ணதாசன் பாட்டாகுமா?
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டியில் பங்கு பெற்ற ஒன்பது பேரும் இனிமையாய்ப் பாடினார்கள். மேடையில் அவர்களின் படைப்புத்திறனையும், கண்ணதாசனனின் பாடல் வரிகளையும் கூட்டம் வெகுவாய் ரசித்து மலரும் நினைவுகளில் மூழ்கிப் பரவசமடைந்தது.

கவிதாஞ்சலியில் கோவிந்தராசு தன் அழகான கவிதை வரிகளால் அரங்கத்தைக் கலகலப்பாக்கித் தயார் நிலைக்குக் கொண்டு வந்தார். கவிஞர் தண்ணீரில் மூழ்கியதால் தமிழ் கரையேறியது என்றார். தொடர்ந்து முனைவர் இரத்தின வேங்கடேசன் மயக்கும் கவிகொண்டு கூட்டத்தை மயக்கநிலையில் தக்க வைத்தார்.

அடுத்து வந்தார் ஆசிரியர் மா. கண்ணப்பன். ஆரம்பமே அருமை. ‘கவிதாஞ்சலியில் கவிபாட, என்ன செய்தால் கவிதை வரும் என்று நிலாப்பார்த்து, கண் பார்த்து, பெண்பார்த்து, பேனும் பார்த்து விட்டேன். தண்ணி போட்டும் பார்த்து விட்டேன். கவிதை வரவில்லை’‘என்றபோது அரங்கம் அதிர்ந்தது. எது கைக்கு வந்தாலும் ‘எதுகை’ எனப்போடமாட்டார் கண்ணதாசனென்றார்.

அவர் தன் மாணவர் சுப. வீரபாண்டியனைஎன்னிடம் படித்தும் எப்படி இப்படி உயர்ந்தாய்?’ என்று கேட்டபோது கூட்டத்தில் மிகப்பெரிய கரவொலியும் சிரிப்பும். அவர் தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியும் அடித்துக் கொண்டிருந்தார் அவருக்கான நேரம் முடிந்தும். மற்ற அங்கங்களுக்கு நேரம் ஆகிறதே என்கிற தவிப்பில் நெறியாளர் சுபா பின்னாலிருந்து நினைவுறுத்திக் கொண்டே இருந்தார். தலைவர் ஆண்டியப்பன் சீட்டில் எழுதியனுப்பினார். பலத்த கைதட்டலோடு கவிதாஞ்சலியை முடித்தார் கண்ணப்பன்.

கண்ணதாசனைப் பற்றிய ஓர் உண்மை
தலைமையுரையில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன், கண்ணதாசனைப் பற்றிய ஓர் உண்மையைச் சொன்னார். தண்ணிபோடுவதால்தான் அவருக்குக் கவிதை வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் கவிதை எழுதி விட்டுத்தான் தண்ணி போடுவார் என்றார்.

தவைவரின் இனிப்பான அறிவிப்பு
திரு.ஆண்டியப்பன், எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இனி வரும் ஆண்டுகளில் சிறந்த நூலுக்கு (சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் சுழற்சி முறையில்) இரண்டாயிரம் வெள்ளி பரிசு, சமீபத்தில் மறைந்த கொடையாளர் ஆனந்தபவன் உரிமையாளர் மு. கு. இராமச்சந்திரா அவர்கள் பெயரால் வழங்கப்பட உள்ளது என்றார். அதற்கு திருமதி பானுமதி இராமச்சந்திரா அவர்களுக்கு நன்றி கூறிவிட்டுச் சுருக்கமாகத் தன் உரையை முடித்துக் கொண்டார் தலைவர் ஆண்டியப்பன்.

சிறப்பு விருந்தினர் சந்துருவும் சுருக்கமான தன் உரையில்
தனக்குப் பிடித்த தன்னை இன்றும் ஊக்கப்படுத்துகிற கண்ணதாசன் பாட்டு ‘அச்சம் என்பது மடமையடா..’ என்று சொல்லிவிட்டு, ஏட்டில் எழுதிக்கொண்டு வரவில்லை. என் இதயத்து உணர்வுகளைச் சொல்லுகிறேன் என்று கூறிய போது பலத்த கரவோசை.


கண்ணதாசனும் நானும்
தமிழ்நேசன் ஞாயிறுபதிப்பு ஆசிரியர் சந்திரகாந்தம் கண்ணதாசனோடு அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது ‘எல்லோருக்கும் ஒரு மதம் பிடிக்கும். ஆனால் எனக்குத் தாமதம் பிடிக்கும்’ என்று கண்ணதாசன் சொன்ன நயத்தைப் பாராட்டினார்.

மாணவர் சுப.வீரபாண்டியன்

சிறப்புரை ஆற்ற வந்த சுபவீயின் உரை ‘கண்ணதாசனும் தமிழும்’ என்கிற தலைப்பில் வித்தியாசமாக இருந்தது. அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் இன்னும் நிறையக் காவியங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். ஈழமக்களுக்காக எழுத எண்ணியிருந்தார் கவிஞரென்றார். சுபவீயிடமிருந்து கவிஞரின் கவிதைகள் மடைதிறந்தாற்போல வந்து கொட்டியது. ஆங்காங்கே நகைச்சுவையோடும் நயத்தோடும் அமைந்த அவர் உரையைக் கூட்டம் வெகுவாய் ரசித்தது.

‘எளிமையான’ வரிகளில் கவிபாடி எல்லோரையும் கவர்ந்தவர் கண்ணதாசன். வார்த்தைகள் வந்து அருவிபோலக் கொட்டும்.
எளிமைதான் அவர் கவிதைகளின் ஆளுமை. அவர் சொன்னதையே அவரே மாற்றிக் கொள்வார் என்றும் அவரின் இயல்புகளைச் சொன்னார். ஆரம்பத்தில் நாத்திகர் பின்னாளில் ஆத்திகர். தனித்தமிழை ஆதரித்தவர் பின்னர் அதில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் தமிழை அவர் ஒருபோதும் மறுத்தது இல்லை. கம்பனை, பாரதியை, கண்ணதாசனை ஒப்பிட்டுக்காட்டிய சுபவீ கண்ணதாசன் பெரியாரை அண்ணாவை காமராசரை பாராட்டியும் இருக்கிறார். அவர்களைத் தாக்கிப்பேசியும் இருக்கிறார் ஆனுலும் அவரின் தமிழுக்காக பொறுத்துக்கொண்டார்கள் என்றார். ‘அனுபமே கடவுள்’ எனும் கருத்துள்ள கவிஞரின் கவிதையை எடுத்தாண்டு பேசினார். யார் பணம் கேட்டாலும் எடுத்து கொடுப்பார். எண்ணிக் கொடுக்க மாட்டார்கண்ணதாசன் மிகச் சிறந்த மனிதர்’ என்று நிறைவு செய்தார்.

சுபவீ சுமார் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றி முடித்த போது கூட்டம் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.


விழா நிறைவு
பொருளாளர் சித்ராவின் நன்றியோடும், பதிர்க்கேள்விக்கான பரிசளிப்போடும் விழா 9:50க்கு நிறைவை நாடியது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுபா.அருணாசலம் தனது அழுத்தமான, தொகுப்புரையில் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து கூட்டத்தைத் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றார்.

கண்ணதாசனையே பேசிக்கொண்டு, கண்ணதாசனையே பாடிக்கொண்டு, கண்ணதாசனையே நினைத்துக்கொண்டு கூட்டம் கலைந்து போனது. அவர் புகழ் இப்புவியில் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். அவரை இவ்வுலகம் தமிழ் உள்ளமட்டும் நினைத்திருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

Friday, October 23, 2009

கவியரசு கண்ணதாசன் விழா


சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும்
கவியரசு கண்ணதாசன் விழா
தமிழ்ச் சுவை பருக வாருங்கள்
இடம் : Singapore Polytechnic Auditorium, at DOVER MRT Station.
இந்த ஞாயிறு (25/10/09) : மாலை 6.00 மணி முதல் இரவு 9:30 வரை

சிறப்பு பேச்சாளர் : முனைவர் சுப. வீரபாண்டியன் ( விஜய் தொலைக்காட்சியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சிறுவர் நிகழ்ச்சி நடுவர்)
தலைப்பு: .கண்ணதாசனும் தமிழும்


மலேசிய எழுத்தாளர் திரு. ப. சந்திரகாந்தம். தலைப்பு: கண்ணதாசனும் நானும்
மற்றும் பாடல் போட்டி இறுதிச் சுற்று.


அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
அன்புடன்

Monday, October 19, 2009

நிழல் தேடும் மரங்கள்

நிழல் தேடும் மரங்கள் (கவிச்சோலை அக்டோபர் - 11/10/2009 )நான் (இராம।வயிரவன்) வாசித்த கவிதை
==========================================
இங்கே கவிச்சோலையிலே
தன்னையே கொடுக்கும் தென்னை
வாழை, புளிமா என
பலா உள்பட பல மரங்களும் இருக்கின்றன
பழ மரங்களும் இருக்கின்றன

சுகமான
நிழல் தருகின்ற
இந்த மரங்கள்
கிளை விரித்து
வேர் பரப்பி
எதையோ தேடுகின்றன?
ஆம் நிழல் தேடுகின்றன!

ஆனால் அந்த நிழல்
கவிச்சோலைக்கு வராமல்
எங்கே வெயிலில் அலைந்து கொண்டிருக்கிறதோ?
எந்தப் பாலைவனத்தில் சுற்றித்திரிகிறதோ?
எந்தப் பாறையில் விழுந்து கிடக்கிறதோ?

வாருங்கள்!
நாம் எல்லாருமாய்ப் போய்
அடுத்த கவிச்சோலைக்காவது
அந்த நிழலை
அழைத்து வந்து விடுவோம்!

குறிப்பு (வேண்டுகோள்): கவிச்சோலைக் கவிஞர்களே உங்கள் கவிச்சோலைக் கவிதைகளை இங்கே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் - அன்புடன் இராமவயிரவன்.

Saturday, October 10, 2009

கவிச்சோலையில் நந்தவனம் ஆசிரியர்

"இனிய நந்தவனம்" மாத இதழின் ஆசிரியர் திரு த.சந்திரசேகரன் அவர்கள் 'கவிதையும் காரணமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "நிழல் தேடும் மரங்கள்" நாளை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 11ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது.

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.

Friday, September 4, 2009

கோம்பைக்குயில் சாமண்டிதாசு பேசுகிறார் இம்மாதக் கவிச்சோலையில்

தமிழகத்தில் தேனிமாவட்டத்தின் கோம்பையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர், எழுத்தாளர் கோம்பைக்குயில் திரு.சாமண்டிதாசு அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றி சிறப்புரை ஆற்றுகிறார்.
இவர் பத்து நூல்களை எழுதியுள்ளார் அவற்றுள் இரண்டிற்கு தமிழக அரசின் பரிசுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சி.த.எ.கழகத்தின் தலைவர் திரு.நா.ஆண்டியப்பன் அவர்கள் அண்ணாவைப் பற்றி படவில்லைக் காட்சியைப் படைக்கவிருக்கிறார்.


இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "காஞ்சித்தலைவன்"

வரும் சனிக்கிழமை செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6 .३० மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.




Tuesday, August 11, 2009

"அமுதசுரபி" ஆசிரியருடன் கலந்துரையாடல்


ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் கழகம், தங்கம் உணவு மாளிகை, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகியவை இணைந்து படைக்கும் கலந்துரையாடல்.
தமிழகத்தின் "அமுதசுரபி" இதழின் ஆசிரியர் திருப்பூர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார்.
இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், (லாவெண்டர் MRT அருகில்)
நாள்:ஞாயிறு 16 ஆகஸ்ட் 2009 மாலை 6:மணி
ஞாயிறு நேசன் பொறுப்பாசிரியர் திரு.ப.சந்திரகாந்தம் அவர்களின் நாவல் "ஆளப் பிறந்த மருது மைந்தன் " நூல் அறிமுகமும் இடம்பெறும்.
அனைவரும் வருக!! அனுமதி இலவசம்!!!
தொடர்புக்கு: நா. ஆண்டியப்பன் - 97849105, சுப.அருணாசலம் - 93221138

Sunday, August 9, 2009

அரிய தகவல்கள் தந்த "சிங்கப்பூர் வரலாறு"


தேசியதினச் சிறப்புக் கவிச்சோலை சனிக்கிழமை (08.08.09) மாலை 7:15 மணியளவில் பெக் கியோ சமூக மன்றத்தில் ஆரம்பமாகியது.

இராம.வயிரவன் அனைவரையும் வரவேற்றமர்ந்ததும், சி.த.எ.க தலைவர் நா. ஆண்டியப்பன் "சிங்கப்பூர் வரலாறு" பற்றிய படவில்லைக் காட்சியினைப் படைத்தார். அந்தப் படைப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிந்து பல அரிய தகவல்களுடன் தேசியநாளுக்குப் பொருத்தமாக அமைந்தது.

சிறப்புச் செய்தல் அங்கத்தில் சி.த.எ.க வின் புரவலர்கள் தங்கம் உணவு மாளிகையின் உரிமையாளர் நாகை தங்கராசு அவர்கள் "தமிழ் வள்ளல்" பட்டம் பெற்றமைக்காகவும், மாதவி இலக்கிய மன்றத்தலைவர் தமிழ் நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் அவர்கள் "மதிப்புறு முனைவர்" பட்டம் பெற்றமைக்காகவும் சி.த.எ.கழகம் சிறப்புச் செய்வதாக செயலாளர் சுப.அருணாசலம் அறிவிக்க தலைவர் ஆண்டியப்பன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

சிறப்புரை அங்கத்தில் மதுரை காமராசர் பல்கலையின் நாட்டுப்புற இயலின் முன்னாள் தலைவர் முனைவர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" பற்றிப் பேசுகையில் கிராமங்களில் பாடப்படுகிற பாடல்களின் பொதுவான தன்மைகளைக் கூறி அதன் அழகை, இயல்பாக அமைந்து விடுகிற எதுகை மோனை, எளிமை பற்றிக்கூறி பாடியும் காட்டினார்.

அடுத்து போட்டிக்கவிதை அங்கத்தில் "ஒருங்கிணைவோம் சிங்கப்பூர்" தலைப்பில் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நூர்ஜகான் சுலைமான், ராஜூகலைவேந்தன், கோவிந்தராசு மூவருக்கும் பரிசுகள் (தலா 30 வெள்ளிகள்) வழங்கப்பட்டன.

செயலாளர் சுப.அருணாசலம் நன்றி கூற கவிச்சோலை இரவு 9:30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

Friday, July 31, 2009

போட்டிக் கவிதைத் தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்"





வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 8ம் தேதி தேசிய நாள் சிறப்புக் கவிச்சோலையாக மலருகிறது.


இடம்: பெக் கியோ சமூக மன்றம் .97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.



பேராசிரியை முனைவர் சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" குறித்துப் பேசுவார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் சிங்கப்பூர் வரலாறு பற்றி ஒரு படவில்லைக் காட்சியைப் படைக்கிறார்கள். போட்டிக் கவிதைக்கான தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்". நேரம் மாலை மணி 6.30

Wednesday, July 29, 2009

பெருங்கவிக்கோ வா. மு. சே. உடன் ஒரு கலந்துரையாடல்


அன்புடையீர், வணக்கம்.தமிழகத்தின் முதுபெரும் கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 31.07.2009 மாலை மணி 6.00க்கு லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீப் அப்போலோவில் கலந்துரையாடல் நடைபெறும். மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு மாநாடு குறித்து இங்குள்ள தமிழ் அன்பர்களுடன் அவர் கலந்துரையாட விரும்புகிறார். அதனால் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறோம். அனுமதி இலவசம்.!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Tuesday, January 27, 2009

பிப்ரவரி 2009 - சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் மாதவி இலக்கிய மன்ற ஆதரவுடன் இணைந்து படைக்கும் சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்.

சிறப்புரை: தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற
புலவர் இளஞ்செழியன் (தலைவர், உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை).
"இளஞ்செழியன் கவிதைகள்"
நூல் அறிமுகம்: நா.ஆண்டியப்பன் (தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்).

நாள்: ஞாயிறு 01- பிப்ரவரி 2009 மாலை மணி 6:30.
இடம்: பெக் கியோ சமூக மன்றம், 97 கேம்பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 219751
பாத்தென்றல் முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும், கவிதைப் போட்டியும் வழக்கம் போல நடைபெறும். கவிதைப் போட்டிக்குத் தலைப்பு: "நந்தவன நாட்கள்"
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!