Saturday, May 11, 2013

மே மாதக் கதைக் களத்தில் மூன்று கதைகளுக்கு ரொக்கப் பரிசு



சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கத் தொடங்கியிருக்கும் கதைக் களத்தின் முதலாவது நிகழ்வில் மூன்று குட்டிக் கதைகளுக்கும் இரண்டு சிறுகதைத் திறனாய்வுகளுக்கும்  ரொக்கபி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

திருமதி மலையரசி கலைச்செல்வம் எழுதிய கிலுகிலுப்பை கதைக்கு முதல் பரிசு (S$50): கிடைத்தது. மாணவர் திரு. அதியன் ஆறுமுகம் எழுதிய என்ன சொல்லப் போகிறாய் எனும் கதைக்கு இரண்டாம் பரிசு (S$30): வழங்கப்பட்டது.  மூன்றாம் பரிசு(S$20) ஹேமாவின்பிரிவு கதைக்குக் கிடைத்தது.

சிறுகதைத் திறனாய்வில் கமலாதேவி அரவிந்தனின் ‘ஒருநாள் ஒரு பொழுது கதையைத் திறனாய்வு செய்த திருமதி விமலா ரெட்டி முதல் பரிசசை (S$30) வென்றார்.:இரண்டாம் பரிசு: (S$20): க. ப. அறவாணனின் ‘விதைத்தால் விளையும் கதையைப் பற்றி எழுதிய திருமதி உஷாவுக்குக் கிடைத்தது.

சிங்கப்பூரின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திரு. பொன் சுந்தரராசு ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றியும் புதுவைப் பேராசிரியர் முனைவர் ந. இளங்கோ, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்தும். சிறப்புரை ஆற்றினர்.

30க்கு மேற்பட்டவர்கள் முதலாவது கதைக் களத்தில் கலந்துகொண்டனர்.

இரண்டாவது கதைக் களம் அடுத்த மாதம்  1-6-2013 சனிக்கிழமை மாலையில்  பெக் கியோ சமுக மன்றத்தில் நடைபெறும்.

அடுத்தமாதக் கதையின் தொடக்கவரி: “அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது....


இந்தத் தொடக்க வரிகளைக் கொண்டு கதைக் களத்திற்கு குட்டிக் கதை எழுதி அனுப்ப வேண்டும். 200 முதல் 250 வார்த்தைகளுக்குள் கதை இருக்க வேண்டும்.
வார்த்தை எல்லைக்குள் இல்லாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கதைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருப்பது முக்கியம்.

கதைக் களத்திற்கு வரும் குட்டிக் கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே 50 வெள்ளி, 30 வெள்ளி, 20 வெள்ளி ஆகிய மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்

குட்டிக் கதைப் போட்டியுடன் சிறுகதைத் திறனாய்வுப் போட்டியும் இடம்பெறும். நீங்கள் விரும்பிய ஒரேயொரு சிறுகதையைத் தெரிவு செய்து அதை 200  முதல் 250 வார்த்தைகளுக்கு மேல் போகாமல் விமர்சனம் செய்து அனுப்ப வேண்டும். திறனாய்வு செய்யப்படும் சிறுகதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுச் சிறுகதையாக இருக்கலாம். இதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். ஒரு சிறுகதைத் தொகுப்பை அல்ல. வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு முறையே 30 மற்றும் 20 வெள்ளி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

உங்கள் குட்டிக் கதைகளும் சிறுகதை விமர்சனங்களும் வரும் 25-05-2013 ஆம் தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வரும கதைகளும் திறனாய்வுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

கதைகளையும் விமர்சனங்களையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ அல்லது aavanna19@gmail.com,  rvairamr@gmail.com  ஆகிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்ப வேண்டும்.

இந்தக் கதைக் களத்திற்கு யார் வேண்டுமானாலும் கதைகளையும் விமர்சனங்களையும் அனுப்பலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகப் பொருளாளர் திரு. இராம. வயிரவனைத் (93860497) தொடர்பு கொள்ளலாம்.