Sunday, July 25, 2010

பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களுடன் கலந்துரையாடல்

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை
சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் முனைவர்
அய்க்கண் குறுகியகால வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.

அவருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை 26.07.2010 மாலை மணி 6.30க்கு விக்டோரியா
ஸ்ட்ரீட்டில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிற்றுண்டியுடன்
கலந்துரையாடல் நடைபெறும்.

தமிழக அரசு 16 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில்
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர்
கருணாநிதி, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஆர் சூடாமணி, சுஜாதா
முதலியோரின் கதைகளுடன் இவரது கதையும் அதில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் 2005ல் உலகத தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது உலகத் தமிழ்
எழுத்தாளர்களிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது.

பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007ல் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய
அனைத்துலகச் சிறுகதைப் போட்டியில் முனைவர் அய்க்கண்ணின் சிறுகதை முதல் பரிசை
வென்றது.

உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநில

எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இவரது கதைதான்.


அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது
நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.

தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கியின் சிறுதைப் போட்டி, கலைமகள்,
அமுதசுரபி குறுநாவல் போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

சாகித்திய அகாடெமி தமிழில் வெளிவந்த சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து
வெளியிட்டது. அவற்றில் இவரது கதையும் அடங்கும்.

Institute of Asian Studies நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம்
பற்றிய கலைக் களஞ்சியத்தில் இவரைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து "நற்கதை நம்பி" எனும் விருதையும்,
ஸ்ரீஜெயேந்திரர் இலக்கியப் பரிசினையும் ராஜசர் அண்ணாமலை செட்டியார் பொற்கிழி
விருதையும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் அழகப்பா பல்கலைக் கழகமும்

இணைந்து வழங்கிய "புதிய இலக்கியச் செல்வர்" பட்டத்தையும் மத்திய அமைச்சர் திரு. ப.
சிதம்பரம் அளித்த "எழுத்து வேந்தர்" எனும் பட்டத்தையும் வி.ஜி.பி. இலக்கியப்
பரிசினையும் இவர் வென்றுள்ளார்.

இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய

மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும்,
தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக
வைக்கப்பெற்றுள்ளன.

தமிழக அரசின் பிளஸ்_டூ வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச்
சேர்க்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை M.Phil, Ph.D. பட்டங்களுக்கு ஆய்வு
செய்துள்ளனர்.

சுமார் 1,000 சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதியுள்ள இவரது படைப்புகள் 71
நூல்களாக வெளிவந்துள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?

வரும் திங்கட்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சந்திப்போம்.

நன்றி.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்

Thursday, July 1, 2010

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்தும் இம்மாதக் கவிச்சோலை சூலை 3, 2010 சனிக்கிழமை இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன் அவர்கள் “பேரறிஞர் அண்ணாவின் சிறுகதையில் மொழிநடை” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு "பயணங்கள் முடிவதில்லை". சிறந்த மூன்று கவிதைகளுக்குத் தலா முப்பது வெள்ளி ரொக்கப்பரிசும் உண்டு. அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

வழக்கம் போல் "படித்தது, பிடித்தது, ரசித்தது" அங்கம் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.