Sunday, August 9, 2009

அரிய தகவல்கள் தந்த "சிங்கப்பூர் வரலாறு"


தேசியதினச் சிறப்புக் கவிச்சோலை சனிக்கிழமை (08.08.09) மாலை 7:15 மணியளவில் பெக் கியோ சமூக மன்றத்தில் ஆரம்பமாகியது.

இராம.வயிரவன் அனைவரையும் வரவேற்றமர்ந்ததும், சி.த.எ.க தலைவர் நா. ஆண்டியப்பன் "சிங்கப்பூர் வரலாறு" பற்றிய படவில்லைக் காட்சியினைப் படைத்தார். அந்தப் படைப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிந்து பல அரிய தகவல்களுடன் தேசியநாளுக்குப் பொருத்தமாக அமைந்தது.

சிறப்புச் செய்தல் அங்கத்தில் சி.த.எ.க வின் புரவலர்கள் தங்கம் உணவு மாளிகையின் உரிமையாளர் நாகை தங்கராசு அவர்கள் "தமிழ் வள்ளல்" பட்டம் பெற்றமைக்காகவும், மாதவி இலக்கிய மன்றத்தலைவர் தமிழ் நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் அவர்கள் "மதிப்புறு முனைவர்" பட்டம் பெற்றமைக்காகவும் சி.த.எ.கழகம் சிறப்புச் செய்வதாக செயலாளர் சுப.அருணாசலம் அறிவிக்க தலைவர் ஆண்டியப்பன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

சிறப்புரை அங்கத்தில் மதுரை காமராசர் பல்கலையின் நாட்டுப்புற இயலின் முன்னாள் தலைவர் முனைவர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" பற்றிப் பேசுகையில் கிராமங்களில் பாடப்படுகிற பாடல்களின் பொதுவான தன்மைகளைக் கூறி அதன் அழகை, இயல்பாக அமைந்து விடுகிற எதுகை மோனை, எளிமை பற்றிக்கூறி பாடியும் காட்டினார்.

அடுத்து போட்டிக்கவிதை அங்கத்தில் "ஒருங்கிணைவோம் சிங்கப்பூர்" தலைப்பில் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நூர்ஜகான் சுலைமான், ராஜூகலைவேந்தன், கோவிந்தராசு மூவருக்கும் பரிசுகள் (தலா 30 வெள்ளிகள்) வழங்கப்பட்டன.

செயலாளர் சுப.அருணாசலம் நன்றி கூற கவிச்சோலை இரவு 9:30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment